உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை நேரில் சந்தித்து சிவபத்மநாதன் கோரிக்கை..

தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியை சந்தித்து, தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் கல்லூரணி ஊராட்சிக்குட்பட்ட செல்வ விநாயகர் புரத்தில் இயங்கி வருகிற பகுதிநேர நியாய விலை கடையை முழுநேர நியாய விலை கடையாக அறிவிக்க வேண்டும் என்று கோரி, மனுவை அளித்தார். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சக்கரபாணியிடம் சிவபத்மநாதன் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது-
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கல்லூரணியில் அமுதம் நியாய விலை கடை இயங்கி வருகிறது. கடந்த 1996-ம் ஆண்டுக்கு முன்பு இப்பகுதி மக்கள் அனைவரும் பாவூர்சத்திரம் நியாய விலை கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வந்தனர்.
அதன் பின்னர் கல்லூரணிக்கு பகுதி நேர கடை பிரித்து வழங்கி கடை செயல்பட்டு வந்தது. கடந்த திமுக ஆட்சியில் கல்லூரணி நியாய விலை கடை முழுநேர கடையாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2011ம் ஆண்டு செல்வவிநாயகபுரத்திற்கு பகுதிநேர கடை பிரித்து வழங்கப்பட்டது.
தற்போது கடையானது வாரத்தில் 3 நாட்கள் கல்லூரணியிலும் 3 நாட்கள் செல்வவிநாயகபுரத்திலும் செயல்பட்டு வருகிறது. கல்லூரணி கடையில் 500 அட்டைகளும், செல்வவிநாயகர்புரம் பகுதிநேர கடையில் 630 குடும்ப அட்டைகளும் உள்ளது.
கடந்த ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் செல்வ விநாயகர்புரம் பகுதிநேர கடைக்கு கட்டிடமும் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் சட்டப்படி தாய் கடையில் 500 கார்டுகளுக்கு குறையாமலும், பகுதி நேர கடையில் 500 கார்டுகளுக்கு அதிகமாக இருந்தால் பகுதி நேர கடையை முழுநேர கடையாக செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி ஊராட்சி செல்வவிநாயகபுரத்தில் செயல்பட்டு வரும் பகுதிநேர அமுதம் நியாய விலை கடையை பொதுமக்களின் நலன் கருதி முழுநேர கடையாக செயல்பட ஆவண செய்ய வேண்டுமென தங்களை கேட்டுக்கொள்கிறேன். என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை ஏற்றுக் கொண்ட அமைச்சர் சக்கரபாணி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மனு வழங்கலின்போது பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, கீழப்பாவூர் பேரூர் கழகச் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.