தென்காசி

குற்றாலத்தில் பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ சிலை நிறுவப்பட வேண்டும்… லூர்து நாடார் வலியுறுத்தல்

1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் பகுதிகளை உள்ளடக்கிய தனி தமிழ்நாடு கிடைத்த  இந்த நாளை தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில்  இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

இதன்பின்னர் லூர்து நாடார் அளித்த பேட்டியில் கூறியதாவது-

ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுக்கின்ற போது மாகாணங்களாக  எல்லைகளை வகுத்து கொடுத்தார்கள். மலையாள நாட்டை ஒட்டி இருந்த குமரி மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் பகுதி செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் தமிழர் பகுதிகள் அனைத்தும் திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

சமஸ்தான நிர்வாகம்  உயர்ஜாதி குடிமக்களுக்கு ஆதரவாகவும் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு எதிராகவும்  ஆட்சி நடத்தினார்கள்.  திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில்  இருந்த தமிழர்களை இழி ஜாதியினராக கருதி அடக்குமுறைகளை கையாண்டார்கள். இந்த பகுதியில் வாழ்ந்த நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்கள் மிகவும் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டார்கள்.

திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தை எதிர்த்து இந்த பகுதிகளில்  வாழ்ந்த தமிழர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். முதல் போராட்டத்தில்  9 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்த பகுதியில் வாழ்ந்த நாடார்கள் மீது பனைக்கு வரி, தலைக்கு வரி, பனைஏறும் தளைக்கு  வரி, கூரை வீட்டுக்கு வரி,  கூரையை மாற்றினால் வரி என்று பல்வேறு விதமான வரிவிதிப்புகளை கொண்டு  கொடுமைகளுக்கு உள்ளாக்கினார்கள்.  11/08/1954 முதல்14/02/1955  வரை 188 நாட்கள் தொடர் போராட்டத்தை இந்த பகுதியில் வாழ்ந்த நாடார் சமுதாய மக்கள் மார்சல் நேசமணி, மபொசி, குஞ்சன் நாடார், சிதம்பரம் பிள்ளை  போன்ற தலைவர்கள் தலைமையில்  அனைத்து சமய சமுதாய மக்களும்  போராடினார்கள்.  இந்த  போராட்டத்தின் போது  11 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் மபொசி யின் கோரிக்கை ஏற்று  மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது   செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் பகுதிகளை மலையாள அரசு தமிழகத்தோடு இணைக்க மறுப்பு  தெரிவித்தது.

இதனால் காமராஜர் அவர்கள் இந்திய உயர்மட்ட அரசியல் தலைவர்களையும் மலையாள அரசியல் தலைவர்களையும் அழைத்து பேசி  இந்த பகுதிகளை தமிழகத்தோடு இணைத்தார்கள். இன்று தமிழகத்தில் மிகப்பெரிய நகரமாக விளங்கும் தென்காசி மிகப்பெரிய சுற்றுலா தலமாக விளங்குகின்ற குற்றாலம், செங்கோட்டை பகுதிகள் தமிழகத்தோடு இருக்கிறது என்றால்  மார்சல் நேசமணி நாடார், குஞ்சன் நாடார், சிதம்பரம் பிள்ளை, மபொசி போன்ற தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களும் 20 நபர்களின் உயிர் தியாகங்களும் இதற்கு பெரிதும் காரணமாகும். பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முயற்சியால்  தனித் தமிழ்நாடும், குற்றாலம், தென்காசி செங்கோட்டை பகுதிகள் கிடைத்த நாளையும் நினைவுகூறுகின்ற வகையில்  தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.

குற்றாலம் பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பெயர் சூட்ட வேண்டும். குற்றாலத்தில் காமராஜர் அவர்களின் முழு திருவுருவ சிலை அமைக்க வேண்டும். என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சுப்பிரமணியன், பொதுச் செயலாளர்  ஜான் டேவிட், மத்திய மாவட்ட தலைவர் முருகன், மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி நாடார், தென்காசி மாவட்ட தலைவர் ராஜ் நயினார்,  குற்றாலம் நாராயணன்,  கொட்டாங்குளம் சண்முகராஜ்,  அய்யாபுரம் கணேசன், கணபதி, சக்தி, முப்புடாதி, கணபதி,  கீழப்புலியூர்  நயினார் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button