பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. பழனி நாடார் எம்எல்ஏ கடும் கண்டனம்

தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான பழனி நாடார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா ? என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும் , நட்சத்திர விடுதிகளும் இல்லை.
ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர் . நாட்டு மக்களுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் கர்மவீரர் காமராஜர் 9 – ஆண்டு காலம் நாட்டின் விடுதலைக்காக சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
இயக்கம் பெரிதா? பதவி பெரிதா? என்ற நிலை வந்த போது 9 ஆண்டு காலம் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த கர்மவீரர் காமராஜர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்கள் பணியாற்ற சென்றவர். மேலும், பல பிரதமர்களையும் தலைவர்களையும் உருவாக்கியதால் கிங்மேக்கர் என அழைக்கப்பட்டவர்.
தமிழகத்தை தாண்டினாலே கோட்டும் சூட்டும் போட்டு அலையும் அரசியல் அலப்பறைகள் மத்தியில், ரஷ்யா நாட்டுக்கு சென்ற போது கூட வேட்டி சட்டையில் சென்ற எளிமைக்கு சொந்தக்காரர் கர்மவீரர் காமராஜர். தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த கர்மவீரர் காமராஜர் குறித்து பேசுவதற்கு முன் தன்னுடைய தகுதியை பற்றி திருச்சி சிவா அவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மேடை கிடைத்தது விட்டது மைக் கிடைத்து விட்டது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நீங்கள் நினைத்து கர்மவீரர் காமராஜரை பற்றி பேசி இருப்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள முடியாத கண்டிக்கத்தக்க செயல்.
காமராஜர் அவர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்கள் அவர்கள் இறக்கும் பொழுது அவர் பாக்கெட்டிலே என்ன இருந்தது அவருக்கு உடமையாக சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டிலிருந்து நான்கு ஐந்து வேஷ்டி துண்டுகளோடு மறைந்து போனவர் காமராஜர் என்பதை வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். எதை பேசுகிறோம்? என்ன பேசுகிறோம் ? சுய நினைவில் தான் பேசுகிறோமா? என தெரியாமல் எதை எதையோ பிதற்றி இருக்கிறார் திருச்சி சிவா அவர்கள்.
மக்களை சந்திக்காமல் இளைஞர்களுக்கு வழிவிடாமல் கொல்லைப்புறவழியில் பதவி சுகத்தை அனுபவித்து வரும் திருச்சி சிவா போன்ற தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்கள் கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று பழனி நாடார் தெரிவித்துள்ளார்.