தென்காசி

தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ஆதரிக்க இயலாது- அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ரமேஷ் குற்றாலத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மேலகரத்தில் வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில நிர்வாகிகள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் கடந்த கால நடவடிக்கைகள், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் உடன் நடைபெற்ற சந்திப்பு விவரம், வரும் ஜனவரி 6-ம் தேதி நடத்தும் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, சென்னை ஊரக வளர்ச்சி இயக்கத்தில் 30.01.2026 அன்று பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் கலந்து கொள்வது, சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, டெல்லி தர்ணா போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கலந்துரையாடி வருகிறோம்.

மேலும் தமிழ்நாடு அரசு இன்று அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பற்றி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தின் முக்கியமான கோரிக்கை ஏற்கெனவே வழங்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான்.

ஆனால் தமிழக அரசு அறிவுத்துள்ள புதிய அறிவிப்பில் மீண்டும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளனர்.எனவே இதனை முழுமையாக நாங்கள் ஆதரிக்க முடியாது.

நாங்கள் கேட்டது பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதிய திட்டம். அதனை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும் அரசு அறிவித்துள்ள இந்த சீரமைப்பு ஓய்வூதிய திட்டத்தில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுபவர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் ஊராட்சி செயலாளர்கள் பயனடைய வாய்ப்பு உள்ளதா? இந்த திட்டத்தின் மூலம் அவர்களும் பயனடைவார்களா? என்பதெல்லாம் இதில் விரிவாக விளக்கப்படவில்லை.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசாணையாக வெளிவந்த பிறகு நாங்கள் எங்கள் தோழமை சங்கங்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்போம். அரசு இன்று அறிவித்துள்ள அறிவிப்பில் பணிக்கொடை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.அதனை நாங்கள் வரவேற்கிறோம் மற்றபடி எங்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கை பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பதுதான் அது பற்றி எங்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தோழமை சங்கத்தின் நிர்வாகிகளுடன் கலந்து பேசி விரைவில் எங்கள் முடிவை அறிவிப்போம் என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button