தென்காசி : புதிய ரேஷன் கடையை விரைந்து அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி நகரப் பகுதியில் புதிய ரேஷன் கடையை விரைவில் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதிலிருந்து பணம் ஒதுக்கியும் வேலை நடைபெறவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி நகர் பகுதியில் 23, 24, 25, வார்டு பகுதிகளுக்கு பொதுவாக தென்காசி சந்தை பகுதியில் அமுதம் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் சுமார் 1,800 குடும்ப அட்டைகள் உள்ளது. இந்தக் கட்டிடம் தற்போது பொழுது பழுது அடைந்தும், போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் புதிய கட்டிடம் வேண்டும் என்று அப்போது மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரேஸ்வரர் கோவில் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பணிகள் தொடங்கப்பட்டது. அதற்கு அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
தற்போது நியாய விலை கடை பழைய கடை அருகே உள்ள ஒரு கோவிலில் இயங்கி வருகிறது. போதிய இட வசதி இல்லாமல் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், கை குழந்தைகளுடன் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்தும், பல்வேறு சிரமங்களுக்கிடையே பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
எனவே பொதுமக்களுக்காக அப்பகுதியில் விரைவில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.